தொலைபேசியிலிருந்து வந்த அலாரச்சத்தம் தூக்கத்தை கலைத்தது. எழுந்து உட்கார்ந்தவள் நீண்டதொரு பெருமூச்சு விட்டாள். அதில் ஆயிரம் உணர்வுகள் கலந்திருந்தன .
"ஏழு மணிக்கி சரி வெளியாகினா தான் பெயித்து சேரேலும் " என முணுமுணுத்துக்கொண்டே வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
ஆயிஷா கொழும்பு பல்கலைகழகத்தில் சட்டபீடத்திற்கு தெரிவாகி வீட்டை பிரிந்து வாடகை வீடொன்றில் தங்கியிருப்பவள். வீட்டில் முதல் பிள்ளை, மூத்த பேத்தி, படிப்பில் கெட்டிக்காரி, சிறுபாராயம் முதலே கொஞ்சம் செல்லமாக வளர்க்கப்பட்டவள். வீட்டு வேளைகளில் பெரிதாய் பங்களிக்காவிட்டாலும் சின்ன சின்ன உதவிகளை தாய்க்கு செய்வாள். தந்தையின் ஏச்சுக்களிலிருந்து நழுவ அவளுக்கு படிப்பு ஒரு சாட்டு. தாயும் அதற்கு உடந்தை. தம்பியை கைகாட்டிவிட்டு நழுவிவிடுவாள்.
இங்கு அவளது வேலைகளை அவளே செய்து கொள்ளவேண்டும். அடுத்தடுத்து என்னென்ன எப்பொழுது செய்ய வேண்டும் என்று அவளே தீர்மானிக்க வேண்டும். கிராமப்புறத்திலிருந்து வந்து கொழும்புச் சூழலில் அவளை இசைவாக்கமடையச் செய்வது அவளுக்கு பெரிய சவாலாக இருந்தது. படிப்பு, காலை மாலை போக்குவரத்து, உணவு, பணம் என சிந்தனைகள் சுழன்று கொண்டே இருக்கும். ஆயிஷா தனக்குள்ளே சில வரையறைகளையும் விதிக்க தவறவில்லை. பல்லின சூழலில் தன் ஆன்மீக பக்கத்தை பேணுவதிலும் சிரத்தை எடுத்தாள்.
வீட்டில் நினைத்த நேரத்திற்கு தேநீர், உணவு, தாய் தம்பியின் உதவி, பயணங்களுக்கு தந்தை, நோயென்றால் உம்மம்மா என வளர்ந்தவளுக்கு இது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஆனால் ஏ.ல் பரீட்சைக்கு பிறகு சில பயிற்சிநெறிகளுக்காக வீட்டைவிட்டு விடுதியில் தங்கியிருந்த பழக்கமிருப்பதால் அவளது வேலைகளை முகாமை செய்துகொள்ள போதுமான பயிற்சி அவளிடமுண்டு.
ஆயிஷா கண்விழித்ததும் அவள் தூக்கம் கலைக்க தாய் அவளது தலையை விரல்களால் கோதுவது வழக்கம். அப்படி பழகியவளுக்கு இன்றெல்லாம் தலை மறத்துவிட்டதாய் ஒரு உணர்வு. தன் விரல்களால் கோதிக்கொள்ளும் போது கண்களில் கண்ணீர் முட்டும்.
பேரூந்தை பிடிக்க ஓடுபவளுக்கு நினைவு வருவதென்னவோ நிழலாய் அவளுடனிருந்த தம்பி தான். பாதசாரிகள் கடவைக்கு முன்னால் நிற்கையில் பாதையை கடக்கும் போதெல்லாம் அவள் கரத்தை இறுக்க பிடிக்கும் தந்தையின் கரத்திற்காய் அவளது உள்ளம் ஏங்கும். பல்கலைக்கழக வாயில் அவளை புதுத்தெம்புடன் வரவேற்கும். ஆனால் நுழையும் போதெல்லாம் அவள் மனக்கண்ணே பாடசாலைக் காலங்களில் அவள் வருகைக்காய் காத்திருக்கும் நண்பர்களின் முகங்கள் வந்துபோகும்.
பல கனவுகள் சுமந்த கண்களுக்கு புது இடம், புது முகங்கள், புது அனுபவம் என எல்லாமே புதியனவாய் தெரிய ஆழ் மனதில் சிறு பயமும் எட்டிப்பார்க்கத்தான் செய்தது. அவளது இலட்சியத்தையும், அறிவுப்பாதையில் சிறகடிக்க அவள் இறகுகளுக்கு வலு சேர்க்கும் உறவுகளின் எதிர்ப்பார்ப்புகளையும் மனதில் ஆழப்பதித்தவளாய் தன் பயணத்தை தொடர்கிறாள் ஆயிஷா. அவளைப்போல் ஆயிரம் ஆயிஷாக்களினது கனவுகள் சுமந்த ஏக்கப் பெருமூச்சுக்கள் கலந்திருக்கின்றன இந்த விடுதிக்காற்றில்...
Written By
HANIM FARIS
Faculty of Law (R), 1st Year
University of Colombo
No comments:
Post a Comment