Friday, April 11, 2025

பல்கலைக்கழகம் நமது கல்விக்கும் மார்க்கத்திற்கும் இடையிலான பாலமாக இருக்க வேண்டும்

இஸ்லாம்: வெறுமனே ஒரு மதம் மட்டுமல்ல, பூரண வாழ்க்கை முறையாகும் 

இஸ்லாம் என்பது வெறும் மதமாக இல்லாமல், ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். எந்த சூழ்நிலையிலும் அதன் கட்டாயக் கடமைகளை விட்டுக் கொடுப்பதும், அலட்சியப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதை நாம் அனைவரும் அறிந்திருப்பினும், பல்கலைக்கழக வாழ்க்கையில் நாம் அதன் கடமைகளை புறக்கணிக்கின்றோம்.

பல்கலைக்கழகத்தில் மார்க்கக் கடமைகளை புறக்கணிப்பது

பல்கலைக்கழக வாழ்க்கை என்பது நாம் குடும்பத்திலிருந்து, பழக்கப்பட்ட சமூகத்திலிருந்து விலகி, புதிய இடங்களில், புதிய நண்பர்களுடன் வாழும் ஒரு காலக்கட்டமாகும். இந்த சூழலில், பல மாணவர்கள் தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை புறக்கணிக்கின்றனர்.

சில மாணவர்கள், "நாங்கள் வீட்டில் இருக்கும்போது பெற்றோர் நோன்பு நோற்க சொல்ல மாட்டார்கள், தொழுகைக்கு வற்புறுத்த மாட்டார்கள். நாங்கள் செல்ல பிள்ளைகள்" எனக் கூறுகின்றனர். "இங்கு வந்து தான் இப்படி கஷ்டப்படுகின்றோம்" எனச் சொல்லுகின்றனர். இது எமது சமுதாயத்திற்கான எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டும் விஷயமாகும்.

மாணவர்களின் அலட்சியம் மற்றும் அதன் விளைவுகள்

பல மாணவர்கள் விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு நேரமாகி சென்று, தொழுகைக்கு அவசியம் கொடுக்காமல் வாழ்கின்றனர்.

காலை நேரத்தில் சுப்ஹ் தொழுகை செய்யாமல், நேரடியாக வகுப்புகளுக்கு செல்கின்றனர்.

மாலை நேரத்தில் விடுதிக்கு திரும்பி வீண் பேச்சுக்களில் நேரத்தை வீணடிக்கின்றனர்.

நோன்பு காலங்களில், சஹர் உணவுக்காக மட்டும் எழுந்து, அதனை சாப்பிட்டு விட்டு பிறகு தொழுகையை புறக்கணிக்கின்றனர்.

இப்தார் உணவுக்காக உணவு கிடைக்கக்கூடிய பல பள்ளிவாசல்களை தேடுகின்றனர். ஆனால், உணவு சாப்பிட்ட பிறகு மஃக்ரிப் தொழுகையை தவிர்த்துவிடுகின்றனர்.

ரமளான் காலங்களில் மட்டும் கிடைக்கும் வாய்ப்பான தராவீஹ் தொழுகையை புறக்கணிக்கின்றனர். அது பரவாயில்லை கட்டாய கடமை இல்லை ஆனால் ஐவேளை தொழுகை கூட இல்லாமல் இருப்பது கவலைக்குரியது.

இவர்களே நாளை பட்டதாரிகளாகி, ஆசிரியர்களாகவும், அதிகாரிகளாகவும் சமூகத்திற்கு திரும்பும்போது, நமது சமுதாயத்தின் நிலை என்ன ஆகும்?

பல்கலைக்கழகம் – கல்விக்கும் மார்க்கத்திற்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும்

பல்கலைக்கழகம் என்பது மார்க்கத்திலிருந்து விலகி நிற்கும் இடமாக இருக்கக்கூடாது. மாறாக, கல்வியும் மார்க்கமும் இணைந்து வளர வேண்டிய இடமாக இருக்க வேண்டும். நமது அடையாளம், நமது கலாச்சாரம், நமது மதம் – இவை அனைத்தும் நாம் சுயமாக பாதுகாக்க வேண்டியவை.

பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு ஓய்வு நேரங்களை வழங்குகின்றன. அந்த நேரங்களை சரியாக பயன்படுத்த வேண்டும். படிப்புக்காகவும் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றவும் பயன்படுத்த வேண்டும்.

சாப்பாட்டிற்காக சிற்றுண்டிச் சாலைக்கு ஓடத் தெரிந்த நாம், தொழுகைக்காக ஓடத் தெரியாதா?

சாப்பாடு, அரட்டை ஆகியவற்றிற்காக நேரம் செலவழிக்கிறோம், ஆனால் தொழுகைக்காக ஒரு சில நிமிடங்களைக் கூட ஒதுக்க மறுக்கிறோம். உணவு அவசியம் என்றாலும், தொழுகை அதன் நேரத்தில் முக்கியத்துவம் பெற வேண்டாமா?

மறுமையை மறந்து வாழ்வது தவறு

பல மாணவர்கள் தொழுகையை புறக்கணிக்கின்றனர், ஆனால் உடை அலங்காரங்களில் மற்றும் வீண் பேச்சுக்களில் கவனம் செலுத்துகின்றனர்.

ஆண்கள் பல்கலைக்கழக விழாக்களிலும் வேடிக்கைகளிலும் வீண் பேச்சுக்களிலும் காலத்தை செலவிடுகின்றனர்.

பெண்கள் உடை அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர், தொழுகைக்காக உளூ செய்ய வேண்டும் முழு செய்தால் அவர்களது ஆடை அலங்காரங்கள் கலைந்து விடும் என தொழுகை ஐவேளை தொழுகையை அலட்சியம் செய்கின்றனர்.

இந்த அலட்சியத்திற்கான விளைவுகள் நம் மறுமையை மட்டுமல்ல, நம் சமூகத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடும்.

மாற்றம் எங்கே இருந்து ஆரம்பிக்க வேண்டும்?

நாம் இன்று எழுந்து மாற வேண்டும்!

தொழுகையை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.

நோன்பை முறையாக நோற்க வேண்டும்.

குர்ஆன் வாசிப்பை அதிகரிக்க வேண்டும்.

பிற மத சகோதரர்களுடன் இணைந்து வாழ, அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களுடன் கரைந்து போகக்கூடாது.

பல்கலைக்கழக வாழ்க்கை என்பது தங்கள் மதத்தையும், கலாச்சாரத்தையும் விட்டுவிட்டு உலக வாழ்க்கையை மட்டும் அனுபவிக்க வேண்டிய இடமாக இருக்கக்கூடாது. மாறாக, கல்வியும் மார்க்கமும் ஒன்றாக வளர்வதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்க வேண்டும்.

நாம் அனைவரும் நமது கடமைகளை உணர வேண்டும். நம்மால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும். இன்று நாம் மாற்றமடைவோம், நாளைய தலைமுறைக்கு ஒரு நல்ல வழிகாட்டலாக இருப்போம்!


Written By

Mohammed Umair
Faculty of Arts (R)
University of Colombo



No comments:

Post a Comment

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...