Wednesday, April 9, 2025

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் இயற்கை மற்றும் சூழல் பாதுகாப்பு

சூழல் பாதுகாப்பு என்பது இஸ்லாமிய வாழ்வியல் முறையின் முக்கிய பங்களிப்புக்களில் ஒன்றாகும். குர்ஆனும் ஹதீஸ்களும் இயற்கையையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த நெறிமுறைகள் மனிதனுக்கு தேவையான ஒழுக்கத்தை மட்டும் அல்லாமல் பூமியின் மீது அவன் பொறுப்பையும் தெளிவுப்படுத்துகின்றன. குர்ஆன் மனிதனை "கிலாஃபா"( பூமியின் பாதுகாவலர்) என வரையறுக்கிறது.  இஸ்லாம் பூமியின் வளங்களை பாதுகாப்பது மனிதனின் ஒரு கடமை என அறிவுறுத்துகின்றது. எனவே எமக்காக படைக்கப்பட்டுள்ள இந்த இயற்கையை பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும். ஒவ்வொரு முறையும் நாம் அந்த வானத்தையும் இந்த பூமியையும் மரங்களையும் இன்னும் பல இயற்கையையும் பார்க்கும் போது ஏன் அல்லாஹ்வின் அற்புதத்தை நினைத்துப் பார்ப்பதில்லை !

இது அனைத்தும் தானே உருவானது அல்ல, படைப்பாளனாகிய அல்லாஹ்வினால் உருவாக்கப்பட்டது. அவ்வாரிருக்கும் போது உருவாக்கிய அவனே இதன் முக்கியத்துவத்தையும் இதனை பாதுகாப்பதில் மனிதனுக்கு இருக்கும் பொறுப்பையும் வலியுறுத்தி கூறுகிறான். சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் பேசியுள்ளான்.

குர்ஆன் மற்றும் சூழல் பாதுகாப்பு

இறை வாக்கானது,

“நிச்சயமாக நாம் நீர்நிலைகளையும், மலைகளையும், மழையையும் மனிதனுக்காக அன்றி வீணுக்காக படைக்கவில்லை” என பல வசனங்களில் பேசுகின்றது. 

இது மனிதர்கள் இயற்கையின் பொறுப்பாளர்களாகச் செயல்பட  வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மேலும், நீர் மாசுபாட்டைத் தடுக்கவும், காற்றை சுத்தப்படுத்தவும், பூமியின் வளங்களைச் சுரண்டாமல் பாதுகாப்பதற்கும் பல கட்டளைகளை இஸ்லாமிய நாகரிகம் வழங்கியுள்ளது. "அதிகளவான வீண் விரயத்தை குர்ஆன்  பல இடங்களில் கண்டித்துள்ளது."

இது  நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை மதிக்கச் செய்யும்.வாழும் சூழலின் மீதான பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் சுமத்தப்பட்டுள்ளது

பூமியில் அழிவை ஏற்படுத்தாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் அழிவை ஏற்படுத்துவோரை விரும்புவதில்லை" (சூரா அல் கசஸ்)

என்ற இறைவாக்கின் அடிப்படையில் சூழல் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

ஹதீஸ் மற்றும் சூழல் பாதுகாப்பு.

அல்லாஹ்வின் தூதரின் வாழ்க்கை வழிமுறைகளிலும் இயற்கையை பாதுகாப்பதற்கான பல முன்மாதிரிகள் காணப்படுகின்றன. 

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்,

"ஒரு முஸ்லிம் மரம் நட்டால் அல்லது பயிர் உழுதால் அதன் பழங்களில் உயிரினங்கள் உண்ணும் ஒவ்வொரு முறையும் அவனுக்கு ஒரு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்" (அல் புகாரி ,முஸ்லிம்)

இந்த ஹதீஸ் மரம் நடுவது மற்றும் இயற்கையை வளப்படுத்துவது ஒரு புண்ணிய வேலை என உணர்த்துகிறது.

மேலும்  ஒரு முறை இறைத்தூதர் இவ்வாறு கூறினார்.

 "நீர்  ஓர் ஆற்றின் அருகே இருந்தாலும் கூட நீரை வீணாக்காதீர்கள்" (இப்னு மாஜா)

இந்த ஹதீஸ் நீரின் ஒவ்வொரு துளியையும் மதிப்பது எவ்வளவு முக்கியம் என சுட்டிக்காட்டுகின்றது.

இது மட்டுமின்றி அல்லாஹ்வின் படைப்புக்களான உயிரினங்களும் கூட இயற்கைக்குள்ளேயே உள்வாங்கப்படுகின்றன. அந்த வகையில் உயிரினங்களை பாதுகாப்பதும் எமது கடமையாகும். பூனைக்கு உணவளிக்காததால் நரகத்திற்கு சென்ற பெண்ணின் கதையும், நாய்க்கு நீர் புகட்டியதால் சுவனத்திற்கு சென்ற பெண்ணின் கதையும் நாம் அறிந்த விடயமே..!

இவை யாவும் இஸ்லாத்தில் இயற்கைக்கான பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறித்து நிற்கின்றது.எனவே இயற்கையை அழிக்காமல் பாதுகாத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி, மரங்களை வளர்த்து சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தால் அது அல்லாஹ்வின் கிருபையை பெரும் வழியாகும். 

இஸ்லாத்தின் இந்தக் கருத்துக்கள், இன்று  நவீன சிந்தனையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன.. ஏனெனில் சூழல் பாதுகாப்பிற்காக இஸ்லாம் காட்டியுள்ள வழிமுறைகள் உலகளாவிய முன்னேற்றத்திற்கு உதவக்கூடியவையாக காணப்படுகின்றன. 

இறைவன்  படைத்த இந்த அழகிய உலகத்தைப் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதி கொள்வோம்!


Written By

B F Zainab
Faculty of Arts (R)
University of Colombo


No comments:

Post a Comment

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...