Monday, June 16, 2025

இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத கல்விகளும், அதன் எல்லைகளும்.

1. மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களைப் படிப்பது (Studying Man-Made Laws)

உண்மையை, பொய்யிலிருந்து விமர்சன ரீதியாக வேறுபடுத்திப் பார்க்கும் திறன் இல்லாவிட்டால், அல்லது இஸ்லாத்திற்கு புறம்பான சித்தாந்தங்களை ஏற்றுக்கொள்வதில் ஆபத்து இருந்தால், மதச்சார்பற்ற சட்ட அமைப்புகளைப் படிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தகைய அமைப்புகளை பகுப்பாய்வு செய்யும் அறிஞர்கள், குறைபாடுகளை தெளிவுபடுத்துவதற்காகவோ, ஷரியாவின் மேன்மையை முன்னிலைப்படுத்துவதற்காகவோ அல்லது இஸ்லாமியக் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் நன்மை பயக்கும் கூறுகளைப் பிரித்தரிவதற்காகவோ அவற்றை கற்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

"..... அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் பாவிகளாவர் (பாசிகுன்)." 

- சூரா அல்-மாயிதா 5:47

இந்த வசனம், மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களை நம்புவது குஃப்ர் (நம்பிக்கையின்மை) என்பதைக் காட்டுகிறது.


2. மரபணு பொறியியல் (Genetic Engineering)

(மனிதர்களில்) - நிபந்தனைக்குட்பட்டது 

கண் நிறம் மாற்றுவது அல்லது  அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்தல் நோக்கங்களுக்காக அல்லாஹ்வின் படைப்பை மாற்றுவதை உள்ளடக்கியிருந்தால், மனிதர்களில் மரபணு பொறியியல் பொதுவாக தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பரம்பரை நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காக அல்லது துன்பத்தைத் தணிக்கப் பயன்படுத்தப்படும்போது, தனிநபருக்கோ அல்லது எதிர்கால சந்ததியினருக்கோ பாதிப்பு விளைவிக்காவிட்டால் அனுமதிக்கப்படுகிறது. இஸ்லாமிய நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தாவரங்கள் மற்றும் விலங்குகளில் மரபணு பொறியியல் மனிதகுலத்திற்கு நன்மை பயக்குமானால் அனுமதிக்கப்படுகிறது.

"...... அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான், அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் 'ஆகுக!' என்பதுதான்; அது ஆகிவிடும்."

- சூரா ஆலு-இம்ரான் 3:47


3. ஆடைகள் வடிவமைப்பு (Fashion Design)

ஒழுக்கம் மற்றும் அவ்ராவை அடிப்படையாகக் கொண்டது

அவ்ராவை (மறைக்க வேண்டிய உடல் பாகங்கள்) வெளிப்படுத்தினால் அல்லது உடல் அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் ஆடைகளை வடிவமைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆடைகள் ஒழுக்கமான தரநிலைகளை கடைபிடித்தும், ​​தளர்வானதாகவும், வெளிப்படையற்ற கனமான துணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் அது ஹலாலாக மாறும். 

"மேலும், முஃமினான பெண்களுக்குக் கூறுங்கள்: 'தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர, தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்..."

- சூரா அந்-நூர் 24:31.


4. இசை மற்றும் நிகழ்த்து கலைகள் (Music & Performing Arts)

எச்சரிக்கையுடன் வரையறுக்கப்பட்டவை

ஒழுக்கக்கேடு, நேரத்தை வீணடித்தல் அல்லது அல்லாஹ்வின் நினைவிலிருந்து திசைதிருப்பல் ஆகியவற்றை ஊக்குவித்தால் இசை அல்லது நிகழ்த்து கலைகள் பற்றிய படிப்புகள் ஹராமாகும்.

இருப்பினும், நஷீத்களைக் (கருவிகள் இல்லாமல் ஆன்மீகப் பாடல்கள்) கற்பதற்கு அல்லது இஸ்லாமிய மதிப்புகளைக் கற்பிக்க, மேம்படுத்த அல்லது ஊக்குவிக்க நிகழ்த்து கலைகளைப் பயன்படுத்துவது ஹலாலாகும்.

"தண்ணீர் (பசுமையான) விளைச்சளை உண்டாக்குவது போல் இசை உள்ளத்தில் நயவஞ்சகத்தை உண்டாக்கும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்."

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

ஆதாரம் : பைஹகீ

மிஷ்காத் : 411


5. ஜோதிடம் மற்றும் மந்திரம் (Astrology & Magic)

ஜோதிடம், குறிசொல்லுதல், சூனியம் செய்தல் மற்றும் சூனியம் பற்றிய படிப்புக்கள் வெளிப்படையாக ஹராமாகும். இந்த நடைமுறைகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த மறைவான (அல்-கைப்) விடயங்களை அணுகுவதாகும். மேலும் இவை ஷிர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளன, இது ஒரு பெரிய பாவமாகும். இந்த நோக்கங்களை உள்ளடக்கிய எந்தவொரு கல்வித் தேடலும் அல்லது தொழிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வானியல் (நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் அறிவியல் ஆய்வு) ஹலாலானதாகும். மேலும் அவை ஊக்குவிக்கப்படுகிறது, ஏனெனில் இது அல்லாஹ்வின் படைப்பைப் புரிந்துகொள்வதற்கும் தொழுகை நேரங்கள் மற்றும் கிப்லா திசையை தீர்மானிப்பதற்கும் உதவுகிறது.

“மேலும், மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன; அவனைத் தவிர வேறு யாரும் அவற்றை அறிய மாட்டார்கள்...”

- சூரா அல்-அன்ஆம் 6:59


6. வட்டி அடிப்படையிலான நிதி கற்கைகள் - ரிபா (Financial Studies Based on Interest-Riba)

நிதி மற்றும் பொருளாதாரம் முக்கியமான துறைகளாகும், ஆனால் ரிபா அடிப்படையிலான அமைப்புகளை (வட்டி அடிப்படையிலான வங்கி) படிப்பதும் ஊக்குவிப்பதும் ஹராம், ஏனெனில் ரிபா குர்ஆனில் வெளிப்படையாக தடைசெய்யப்பட்டுள்ளது. இது பொருளாதார அநீதி மற்றும் சுரண்டலுக்கு வழிவகுக்கின்றது. இருப்பினும், இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித்துறையில் அபிவிருத்தி செய்ய அல்லது வேலை செய்ய படிப்பது ஹலாலானது மற்றும் ஊக்குவிக்கப்படுகிறது.

"அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்துள்ளான் மற்றும் வட்டியை (ரிபா) தடை செய்திருக்கிறான்….” 

- சூரா அல்-பகரா 2:275


Written By

Jihana Jesril 

Faculty of Technology(R), 3rd  Year

University of Colombo


1 comment:

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...